தமிழில் நான் நடித்துள்ள முதல் இரு படங்களுமே விஜயகாந்த் சாருடன் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்று விஜயகாந்த் புகழ் பாடுகிறார் மும்பை க்வீன் ஷெரில் பின்டோ.விஜயகாந்த்தின் 150வது படமான அரசாங்கம்தான் ஷெரில், விஜயகாந்த்துடன் இணைந்த முதல் தமிழ்ப் படம். மும்பையிலிருந்து வந்த ஷெரிலுக்கு அரசாங்கம் நல்ல அறிமுகமாக இருந்ததால், தொடர்ந்து விஜயகாந்த்துடன் இணைந்து நடிக்க வந்த 2வது வாய்ப்பான எங்கள் ஆசானை மனமுவந்து ஏற்றுக் கொண்டாராம்.
படப்பிடிப்பின்போது விஜயகாந்த் நிறைய கற்றுக் கொடுத்தாராம். தமிழ் ரசிகர்களை எப்படிக் கவருவது, எப்படி நடிக்க வேண்டும் என்பது உள்பட நிறைய டிப்ஸ் கொடுத்தாராம். சொல்லி சொல்லி நெகிழ்கிறார் ஷெரில்.
விஜயகாந்த்துடன் நடிக்கும்போது எனக்கு எந்தப் பதட்டமும் இல்லை. அந்த அளவுக்கு என்னை சகஜமாக்கி விட்டார் விஜயகாந்த் என்கிறார்
ஷெரில்.
முதல் படத்தில் மாடர்ன் ரோலில் நடித்த எனக்கு எங்கள் ஆசான் படத்தில் இந்தியப் பெண்ணாக, அதிலும் சுத்த தமிழச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் சந்தோஷம். இப்படத்தில் நான் அப்படியே தமிழ்ப் பெண் போலவே இருக்கிறேன் என்று யூனிட்டே புகழாரம் சூட்டியது என்கிறார் மனசு நிறைய மகிழ்ச்சியுடன், தலை கொள்ளாத மல்லிப் பூ குலுங்க.
எங்கள் ஆசானில் முதலில் விஜயகாந்த்தை விரட்டி விரட்டி காதலிப்பவராகவும், பின்னர் அவரை வெறுப்பவராகவும் நடித்துள்ளாராம் ஷெரில். இப்படி மாறுபட்ட நடிப்பைக் கொடுக்க விஜயகாந்த் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம்.
ஷெரில் சாமானியப்பட்ட பெண் இல்லை. 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தவர். சோனி டிவியின் மை மிஸ் இந்தியா விருதையும் தட்டிச் சென்றவர். நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பூணை நடை போட்டுள்ளார். தோணியுடன் ஒரு விளம்பரப் படத்திலும் தலை காட்டியுள்ளாராம்.
ஒரு ஸ்ரீதேவி மாதிரி, ஒரு ஜோதிகா மாதிரி தமிழிலும் புகழ் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்துள்ள ஷெரில், விதம் விதமான கேரக்டர்களில் புகுந்து விளையாடக் காத்திருக்கிறாராம்.
ஷெரில் பேச்சே திரில்லாத்தான் இருக்கு.