திங்கள்கிழமை, நவம்பர் 16, 2009, 11:50 [IST]
மலையாள நடிகை கீது மோகன்தாஸ் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொச்சியில் நடந்தது. ஒளிப்பதிவாளர் ராஜீவுடன் அவருக்கு திருமணம் நடந்தது. கேரள திரையுலகம் திரளாக வந்து அவரை வாழ்த்தியது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை கீது மோகன். 'ஒன்று முதல் பூஜ்யம்வரை' என்ற மலையாள படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமானார். அதன்பின்பு மம்முட்டி, மோகன்லால் நடித்த பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான 'நள தமயந்தி' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தார்.
ஆனால் தமிழில் அதற்குப் பிறகு வாய்ப்புகள் இல்லை அவருக்கு. இந்நிலையில் சேஷம் என்ற மலையாள படத்தில் நடித்த போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவுடடன் கீதுவுக்கு காதல் ஏற்பட்டது. க்ளாஸ்மேட் போன்ற பிரபல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் ராஜீவ். இவர்களின் காதல் பெற்றோருக்குத் தெரிந்ததும் திருமண ஏற்பாடுகளில் இறங்கினர்.
இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நேற்று மாலை கொச்சியில் உள்ள ராஜீவ்காந்தி பவுண்டேசன் இண்டர் ஸ்டேடியத்தில் நடந்தது.
திருமண விழாவில் பிரபல மலையாள நட்சத்திரங்கள் மம்முட்டி, சீனிவாசன், நடிகை காவ்யா மாதவன் உள்பட ஏராளமான மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.