கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற 'உன்னாலே உன்னாலே' படத்தில் இடம் பெற்றுள்ள 'ஜூன் போனால் ஜூலை காற்று' பாடல் ஆபாசமாக இருப்பதாக கூறி அதை தடை செய்யக் கோரி தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் எந்த ஆபாசமும் இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது.மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான படம் உன்னாலே உன்னாலே. இப்படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடல் ஜூன் போனால் ஜூலைக் காற்று. ராஜு சுந்தரம், வினய் உள்ளிட்டோர் பாடி ஆடும் பாடல் இது.
படம் வெளியாகி ஒரு ஆண்டு ஓடி விட்ட நிலையில் இந்தப் பாடல் ஆபாசமாக இருப்பதாக கூறி தடை செய்ய வேண்டி ஜெயராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், வினய்,சதா நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே படத்தில், ஜூன் போனால் ஜூலைக் காற்று என்ற பாடல் உள்ளது. இது ஆபாசமாக உள்ளது. ஆனால் தணிக்கைக் குழுவினர் பாடலை நீக்காமல் அனுமதித்துள்ளனர்.
தற்போது இப்படத்தை தெலுங்கில் நீவாலே நீவாலே என்ற பெயரில் தயாரித்துள்ளனர். அப்படத்தில் இப்பாடலை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்து மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இப்படம் திரைக்கு வந்து விட்டது. இப்போது எங்குமே இது ஓடவில்லை. காலம் கடந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கைக் குழு என்பது சட்டப்பூர்வமான ஒரு அமைப்பாகும். படத்தையும், பாடல்களையும், பாடல் காட்சிகளையும் அந்தக் குழு பார்த்து ஆராய்ந்த பிறகுதான் ஆபாசம் இல்லை என்ற முடிவுக்கு வந்து திரையிட அனுமதி வழங்கியுள்ளது.
எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.