Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
நம்பியார் உடல் தகனம்
Thursday, November 20 2008

சென்னை: சென்னையில் நேற்று மரணமடைந்த பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியாரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். நம்பியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.

திரையுலகினர் பெருமளவில் திரண்டு நம்பியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் விரைந்து வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என்றார்.

நடிகர்கள் கமலஹாசன், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், ராதாரவி, செந்தில், எஸ்.வி.சேகர், கரண், ராஜேஷ், நடிகைகள் கே.ஆர்.விஜயா, மனோரமா, விஜயகுமாரி, டைரக்டர்கள் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், பி.வாசு, படஅதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, எஸ்.ராமநாதன், கே.டி.குஞ்சுமோன், ராம்குமார், ஒளிப்பதிவாளர் டி.என்.சுந்தரம், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயலலிதா அஞ்சலி:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், போலீஸ் டி.ஜி.பி.(பயிற்சி) விஜயகுமார் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

நம்பியார் மரணம் பேரிழப்பு: ஜெ.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பழம்பெரும் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும், தீவிர ஐயப்ப பக்தருமான எம்.என்.நம்பியார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

ஏராளமான திரைப்படங்களில் நான் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். எல்லோரிடமும் மிகுந்த கலகலப்புடனும், நகைச்சுவை பாங்குடனும் பேசக்கூடியவர்.

நம்பியாருடன் படிப்பிடிப்பு என்றாலே வேலைப்பளுவும் தெரியாது. பொழுது போவதும் தெரியாது. நம்பியார் என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.

நம்பியாரின் இழப்பு திரைப்படத்துறையினருக்கு மட்டுமல்லாமல் ஆன்மீக வாதிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இன்று மாலை நம்பியாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வழியெங்கும் பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர். பெசன்ட் நகர் மின்சார மயானத்தை இறுதி ஊர்வலம் அடைந்ததும் அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.