திங்கள்கிழமை, நவம்பர் 16, 2009, 13:17 [IST]
தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரே படமான பேராண்மையை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்கிறது அய்ங்கரன்.
ஆனால் இப்போதுள்ள வடிவத்தில் அல்ல... பாடல்கள், தேவையற்ற சில காட்சிகளை வெட்டிவிட்டு சிக்கென்று தரப்போகிறார்களாம் இந்தப் படத்தை. தமிழில் 150 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், இப்போது ஆங்கிலத்தில் 90 நிமிட, ராம்போ டைப் ஆக்ஷன் த்ரில்லராக மாற்றப்படுகிறது.
இதற்கான வேலைகளில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் மும்முரமாக உள்ளார். தனது அடுத்த புதிய படத்தைத் துவங்குவதற்குள் பேராண்மையின் ஆங்கில வடிவத்தை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளாராம். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள பேராண்மையில், ஹாலிவுட் நடிகர் ரோலன்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அடுத்த தனது அடுத்த படத்தை மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் ஜனநாதன். படத்தைத் தயாரிப்பவர் யார் என்பதில்தான் இப்போது பெரும் போட்டி நடக்கிறதாம். ஒரு பக்கம் அய்ங்கரன் நிறுவனம் தங்களுக்கு படம் செய்ய வேண்டும் என்று கேட்க, இன்னொரு பக்கம் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் ஜனநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
தயாரிப்பாளர் யாராக இருந்தாலும், ஜனாவின் படம் என்பதால் இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது!