சென்னை: என்.எஸ்.ஜி இந்தியாவுக்கு வழங்கியுள்ள அணு வர்த்தக அனுமதியின் மூலம், இந்தியா உலகின் முக்கியமான அணு வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த மாதவன் நாயர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் அணு வர்த்தக தடையை என்.எஸ்.ஜி. நீக்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முக்கியமான அணு வல்லரசாக நம்மை என்.எஸ்.ஜி. அங்கீகரித்துள்ளது.
உலக சமுதாயத்தில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் இது. அணு தொழில்நுட்பத்தில் இந்தியா வெகுவாக முன்னேறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும், வளரவும் இந்த அனுமதி நமக்கு பெரும் உதவியாக இருக்கும்.
நமது சாதனைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. உயர் தொழில்நுட்பத்தில் நாம் மேலும் வளர இது உதவும் என்றார் மாதவன் நாயர்.