Oneindia Mobile
Photo Gallery!
ஐ.நா: ராஜபக்சேவின் தமிழ் 'ஸ்டண்ட்'
Thursday, September 25 2008

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமிழர்கள் மீது தனக்கு பற்றுதல் உண்டு என்பதைக் காட்டுவதற்காக ராஜபக்சே அடித்துள்ள ஸ்டண்ட் என இது வர்ணிக்கப்படுகிறது.

தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாடு, இந்தியாவில் உள்ளது. உலகெங்கும் பல கோடி மக்கள் தமிழைத் தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும் உள்ளது.

இருப்பினும் இதுவரை ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் யாரும் தமிழில் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக, சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட அதிபர் ராஜபக்சே நேற்று தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஐ.நா. சபையின் 63வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்துள்ளார் ராஜபக்சே. நேற்று அவர் ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் நிலவி வரும் தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் பேசியபோது தமிழுக்கு மாறினார். ராஜபக்சே அப்போது கூறுகையில், எனது தாய்மொழி சிங்களம். இருந்தாலும் இனப் பிரச்சினை குறித்து தமிழில் சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன்.

சிங்களமும், தமிழும், இலங்கை மக்களின் இரு மொழிகள். பல நூற்றாண்டுளாக இந்த இரு மொழிகளையும் இலங்கை மக்கள் பேசி வருகின்றனர். இரு மொழிகளும், இலக்கியத்தில் வளமை படைத்தவை. எங்களது நாட்டின் ஆட்சி மொழிகளாக இரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எங்களது நாட்டின் ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் ஒருமுகமாக, இரு மொழி பேசும் மக்களின் உறவுகளும் வலுப் பெற்று வருகின்றன. எங்களது எதிர்கால வளர்ச்சியின் அஸ்திவாரமாக இரு மொழி மக்களும் திகழ்வார்கள்.

ஒரே நாடு என்ற குடையின் கீழ் இரு மொழி பேசும் மக்களும், வளமையான சுதந்திரமான, இலங்கையை உருவாக்குவார்கள். இரு இன மக்களின் பிணைப்பும் நீடித்து நிலைக்கும் என்றார் ராஜபக்சே.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.