Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
திமுகவுக்கே பரிமாற தெரியும்-கருணாநிதி
Wednesday, November 26 2008

சென்னை: வங்கிகள் தேசியமயமாக்கப்பட காரணமாக இருந்தது திமுக என முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஊராட்சி அளவில் மாநிலத்தில் 5 சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கி அவர் பேசுகையில்,

தர்மபுரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 1989ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவித் திட்டம். அதைத் தோற்றுவித்த காரணத்தால், அதனுடைய தொடர் வளர்ச்சியை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இது ஆண்கள் பங்குபெறுகிற திட்டமாக இது அமைந்திருக்குமேயானால், பல சோடை சொத்தைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இது பெண்களுடைய சுய உதவிக் குழு என்பதால் பணம் பத்திரமாக இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், கருணாநிதி பிறந்த மாவட்டம். காஞ்சீபுரம் மாவட்டம், கருணாநிதியை ஆளாக்கிய அண்ணா பிறந்த மாவட்டம். விருதுநகர் மாவட்டம், எங்களுக்கு முன்பிருந்து அரசு புரிகின்ற இலக்கணத்தைக் கற்பித்த காமராஜர் பிறந்த மாவட்டம். இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகள் மணிமேகலை விருதைப் பெற்றிருப்பதற்காக என் பாராட்டுகள்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைவதற்கு, நான் நடத்திய ஆட்சி எப்படி காரணமாக அமைந்ததோ, அதைப்போலத் தான் இந்தியாவில் வங்கிகளை தேசியமயமாக்குகின்ற திட்டமும், திமுகவின் தூண்டுதலால் தான் - கோரிக்கையால் தான் நடந்தது.

1969ம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணா மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பு என்னுடைய தோளிலே சுமத்தப்பட்டது. நான் முதன்முதலாக டெல்லிக்கு, முதல்வர்கள் மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அந்த மாநாட்டிற்கு தலைமை வகித்தவர், இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி.

அப்போது துணைப் பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். அந்த மாநாட்டிலே நான் பேசும்போது, நீங்கள் இந்தியாவிலே இருக்கின்ற பெரிய வங்கிகளையெல்லாம் தேசியமயமாக்க்குங்கள், அப்படிச் செய்தால் ஏழையெளியவர்களுக்கு பணம் கிடைக்கும், கடன் கிடைக்கும், அந்தக் கடனும் ஒழுங்காக வந்து சேரும், நன்றி உணர்வோடு திரும்பக் கிடைக்கும் என்றேன்.

அதற்கு அடுத்த நாள், தான் பேசுவதற்கு மீண்டும் ஒரு முறை நேரம் கேட்டுப் பெற்ற மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, நான் பேசியதை வழி மொழிவதைப் போல பேசினார். சில மாதங்களுக்கு பிறகு இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கி ஆணை பிறப்பித்தார்.

என்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காக இதைச் சொல்லவில்லை. இதற்கு மூல வேர், ஏழைகளுக்கு கடன் கிடைக்க, உழைப்பாளிகள் எல்லாம் பல தொழில்களை நடத்த வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்றால், வங்கிகள் தேசியமயமாக ஆக்கப்பட்டது தான் மூலக் காரணம் - அந்த மூல காரணத்திற்கு மூலமாக இருந்தது திமுக என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.

இப்போது சில பேர் சொல்லக் கூடும். கருணாநிதி பிற்போக்குவாதி, கருணாநிதிக்கு கம்யூனிசம் தெரியாது, கருணாநிதிக்கு சமதர்மம் தெரியாது, கருணாநிதிக்கு சமத்துவ கொள்கை புரியாது, எல்லாவற்றையும் நாங்கள் தான் சமைத்து பரிமாறிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்.

அவர்களுக்கு சமைக்கத் தெரியும், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பரிமாறத் தெரியாது. யாருக்கு பரிமாற வேண்டும் என்ற அந்தக் கலை தெரிந்து அதைச் சமைத்து பரிமாறிய பெருமை திமுக அரசுக்குத் தான் உண்டு.

இந்தச் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஸ்டாலினும் அதிகாரிகளும் கேட்டார்கள். தன்னுடைய சுகத்தைப் பற்றி வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல்- பிறரை வாழ வைக்க பாடுபட்ட பெண்மணி மணிமேகலை. இதனால் தான் அந்தப் பெயரை வைக்கச் சொன்னேன் என்றார் கருணாநிதி.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

இந்தியன் வங்கி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடனில் 99 சதவிதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு பெண்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்திய அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18,041 கோடி கடன் தரப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.