Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்க விடாமல் தடுக்கும் அதிருப்தியாளர்கள் - எதியூரப்பா கண்ணீர்
சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 13:42 [IST]



Yeddyurappa
டெல்லி/பெங்களூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைக் கூட செய்ய விடாமல், அதிருப்தியாளர்கள் நடந்து கொள்வதால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், கடவுள் என்னை மன்னிப்பார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.

இதுகுறித்து சுவர்ணா என்ற கன்னடத் தொலைக்காட்சிக்கு அவர் கண்களில் நீர் ததும்ப அளித்துள்ள பேட்டியில்,

வெள்ள நிவாரணப் பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு சிலர் நடந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையைத் தருகிறது.

வெள்ள நிவாரணப் பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் செயல் இது. இதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போது இப்படி நாம் நேரத்தையும், காலத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பது மிகவும் மோசமானது.

நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர். இதனால் நான் கலங்கிப் போய் விடக் கூடாது. கடவுள் என்னை மன்னிப்பார் என நம்புகிறேன் என்று கூறினார் எதியூரப்பா.

தீர்வு ஏற்பட்டது - எதியூரப்பா..

முன்னதாக ரெட்டி சகோதரர்களுக்கும், தனக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா இன்று டெல்லியில் தெரிவித்தார்.

ஆனால் அதிருப்தியாளர்களோ, தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எதியூரப்பாவை நீக்கினால்தான் சமரசம் ஏற்படும் என ரெட்டி சகோதரர்கள் தரப்பு பாஜக மேலிடத்திடம் தெளிவுபடக் கூறியுள்ளது. அதேசமயம், முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று எதியூரப்பாவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் பிரச்சினை தீர்ந்ததாக எதியூரப்பா கூறியுள்ள போதிலும், இன்னும் அது நீடிப்பதாகவே கருதப்படுகிறது.

கடைசியாக வந்த தகவல்களின்படி சர்ச்சைகளின் மையமாக கருதப்படும் அமைச்சர் ஷோபாவை பதவியிலிருந்து நீக்க எதியூரப்பா சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

அதேபோல, சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார், அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்.

எதியூரப்பா அமைச்சரவையிலிருந்து 3 அல்லது நான்கு அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள். ஆனால் முதல்வர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது.

இந்த சமரசத்தை அதிருப்தியாளர்களிடம் பாஜக மேலிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டதாம்.

எதியூரப்பாவை நீக்கியாக வேண்டும் - ரெட்டிகள்

இதை அடிப்படையாக வைத்துத்தான் தீர்வு காணப்பட்டு விட்டதாக எதியூரப்பா கூறியுள்ளார். ஆனால் எதியூரப்பாவை நீக்கியே ஆக வேண்டும் என ரெட்டி சகோதரர்களில் ஒருவரான அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.

52 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா நாடகம்..


இந்த நிலையில், ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாக இருக்கும் 52 பாஜக எம்.எல்.ஏக்களும் ஜனார்த்தன ரெட்டியிடம் தங்களது ராஜினாமாக் கடிதங்களைக் கொடுத்துள்ளனராம்.

இவர்களுடன் ஹைதராபாத்தில் வைத்து ஜனார்த்தன ரெட்டி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதுகுறித்து டெல்லியிலிருந்து ஹைதராபாத் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், கர்நாடக முதல்வர் குறித்த எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. சமரசப் பேச்சு குறித்த கருத்து எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியாது. எனது நிலையில் மாற்ம் இல்லை என்றார்.

அதேபோல எதியூரப்பாவும் டெல்லியிலிருந்து ஜம்மு கிளம்பியுள்ளார். அங்குள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு அவர் செல்கிறார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அனைத்துப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விட்டது. என் மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சித் தலைமைக்கு எனது நன்றிகள். அனைவரின் நம்பிக்கையையும் பெற்று நான் தொடர்ந்து முதல்வராக செயல்படுவேன்.

கர்நாடக பாஜக அரசு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் என்றார்.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.