Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
அடாத மழையிலும் உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்
சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 15:15 [IST]



சென்னை: சென்னையில் இன்று கொட்டும் மழைக்கு மத்தியில், அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இருப்பினும் மழையில் உண்ணாவிரதம் வேண்டாம் என ஜெயலலிதா வலியுறுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர் அதிமுகவினர்.

டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் கோரி அதிமுக சார்பில் இன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. உண்ணாவிரதத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, வி.பி.கலைராஜன் மற்றும் கே.சூர்ய ஆச்சாரி, எஸ்.பி.எஸ்.ராஜா, ஏ.ஏ.அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதத்தை தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் உண்ணாவிரதத்தை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து ஜெயலலிதாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார் செங்கோட்டையன்.

இதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டு விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்லுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

பின்னர் அதிமுக எம்.எல்.ஏ சின்னச்சாமி பேசுகையில்,

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் 36ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை டாஸ்மாக் கடைகளில் வேலைக்கு அமர்த்தினார். தற்போது முதல்வர் கருணாநிதி டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்.

36 ஆயிரம் ஊழியர்களையும் உடனடியாக நிரந்தர அரசு ஊழியர்களாக்க வேண்டும். அவர்களுக்கு 6வது சம்பள குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதியங்கள் வழங்க வேண்டும். அத்துடன் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் மீது எந்தவித பணிநீக்க நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

இந்த அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருமானத்தை ஈட்டித் தரும் டாஸ்மாக் தொழிலாளர்களை அரசு பழிவாங்க கூடாது. டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை உருவாகும்.

இந்த தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சட்ட ரீதியாகவே வேலை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.