சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் ஆட முடியாது. இன்று முதல் இந்தத் தடை தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீறி விளையாடினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மெரீனா கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்காக சாலை உள்ளது. ஆனால் அந்த சாலையில் கிரிக்கெட் விளையாடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
விடுமுறை தினங்களில் இந்த சாலையில் நடக்கவே முடியாத அளவுக்கு கிரிக்கெட் வீரர்கள் குவிந்திருப்பார்கள்.
இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் அதிருப்தி அடைந்தனர். கிரிக்கெட் விளையாடுவதைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மெரீனா கடற்கரை பல கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் விளையாட வருவோர் இதை பாழ்படுத்தும் அபாயம் ஏற்பட்டதால் கிரிக்கெட் விளையாட காவல்துறை தடை விதித்தது.
இதை எதிர்த்து கிரிக்கெட் விளையாடுவோர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் இந்தத் தடை உத்தரவில் எந்த தளர்வும் இல்லை என்று காவல்துறையினர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். மேலும், மீறி விளையாடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆயுதப் படை போலீஸார் தற்போது மெரீனாவில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று சென்னையில் கன மழை பெய்து வருவதால் யாரும் கிரிக்கெட் ஆட வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என காவல்துறை துணை ஆணையர் மவுரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று மழை காரணமாக யாரும் கிரிக்கெட் விளையாட வரவில்லை என்றார்.
துணை ஆணையர் மவுரியா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் அடங்கிய கண்காணிப்பு குழு மெரீனா கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நான்கு வாகனங்களில் இவர்கள் கடற்கரையை ரோந்து சுற்றி கண்காணிப்பார்கள். மேலும், கடற்கரையில் மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டுள்ளது.